திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் கைத்தறி பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கடந்த 5 மாத காலமாக கரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஆரணி நகரத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உணவுக்கே வழியில்லை என்கின்ற நிலைமையை சந்தித்து வருவதாக பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலக மக்களுக்கெல்லாம் பட்டுத்துணியை நெசவு செய்து அழகான ஆடைகளை பரிசளித்து வரும் நெசவாளர்கள் தங்களுக்கென்று உடுத்திக் கொள்வதற்கு சாதாரண உடையை கூட வாங்கும் சக்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது இந்தக் கரோனா நோய் தோற்று.
கரோனா தோற்று பரவலால் பாதிப்படைந்தப் பட்டு நெசவு செய்யும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் தங்களது துயரத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர். இந்த கரோனா நோய் வருவதற்கு முன்பு பத்து நாள்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் சம்பாதித்து வந்த நாங்கள், தற்போது ஒரு மாதத்திற்கு, மாதம் முழுவதுமே 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது.
20 ஆண்டுக்கும் மேலாக இந்த நெசவு தொழிலை மட்டுமே செய்து வருகின்றோம். நெசவு தான் எங்களின் பரம்பரை தொழில் என்பதால் வேறு கைத்தொழில் தெரியாது. எனவே நெசவு தொழிலை மட்டுமே நாங்கள் நம்பி வாழ்ந்து வருகிறோம். இதனால் அரசாங்கம் எங்களுக்கு உரிய உதவித் தொகையை அளிக்க வேண்டும். நெசவுத் தொழிலாளர்களின் துயரத்தை துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனதில் பொங்கி எழும் துயரத்தை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் எங்களுக்கு ஒரு பைசா கூட இதுவரை வந்து சேரவில்லை. எங்களுக்கு கிடைத்தது ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட அளித்த அரிசி மட்டுமே. அதை வைத்து தான் நாங்கள் தற்போது எங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறோம். இதையும் அரசாங்கம் நிறுத்திவிட்டால் ஒரு வேளை உணவுக்குக் கூட திண்டாட வேண்டிய நிலைமைதான் உருவாகும் என்கின்றனர்.
6 கஜம் நீளமுள்ள ஒரு பட்டு சேலையை நெய்து முடிப்பதற்கு சுமார் 10,000 முதல் 20000 முறை கைகளையும் கால்களையும் இழுக்க வேண்டி உள்ளதால் உடலளவில் பாதிக்கப்படும் நெசவாளர்கள் தற்போது வருமானம் இல்லாத காரணத்தால் மனதளவிலும் நொடிந்து போயுள்ளனர்.
கரோனா பாதிப்பு குறித்து விற்பனையாளர்கள் தெரிவிக்கையில், சென்ற ஆண்டு சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு பட்டு சேலைகளை ஏற்றுமதி செய்ய முடிந்ததாகவும் தற்போது கரோனா முழு ஊரடங்கால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கொரியர் பார்சல் சர்வீஸ் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எனவே உற்பத்தி செய்த சேலைகளை அனுப்பி விற்பனை செய்ய முடியாத தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி ஆரணி நகரம் முழுவதும் 50 ஆயிரம் நெசவுத் தொழிலாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சார்ந்து ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாக வைத்துக்கொண்டால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆரணி நகரம் முழுவதும் கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி வாழ்ந்து வந்தவர்கள். தற்போது வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இழந்து துயரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே திருமணத்திற்கு சேலை எடுப்பவர்கள் ரூபாய் 50 ஆயிரத்திற்கு எடுப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் தற்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் திருமணங்கள் ஒரு சிலரே பங்கேற்று நடத்தி வைக்கின்றனர் என்பதால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமே தற்போது பட்டுசேலை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு 10 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி வந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் வருமானம் வருவதே பெரிய மலையாக பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து இல்லாததால் நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டு மற்றும் ஜரிகைகள் வழங்க முடியவில்லை. நெசவாளர்கள் நெய்து வைத்துள்ள புடவைகளை எடுத்துவந்து விற்பனையும் செய்யமுடியவில்லை. திருமணங்கள் சாதாரணமாக நடப்பதால் ஆடம்பரப் பொருளான பட்டு விற்பனை 90 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நெசவாளர்களின் குடும்பங்கள்.
ஆரணி நகரத்திற்கு நெசவுத் தொழில் மூலம் உலக அளவில் மிகப்பெரிய பெருமை உள்ளது. அப்படிப்பட்ட நெசவுத் தொழிலை அழியாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.