திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக காலை முதலே திரளான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். ஆனால், நண்பகல் ஒரு மணி வரையிலும், மாவட்ட ஆட்சியர் வராததால், கடும் பசியிலும், வெயிலிலும் மக்கள் பலர் அங்கு தகுந்த இடைவெளியின்றி காத்திருந்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அங்கு வருவதைக் கண்ட பொதுமக்கள் ஏராளமானோர், அவரிடம் மனு அளிப்பதற்காக முண்டியடித்து ஓடினர். அவர்களைத் தடுத்து காவல் துறையினர் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கூட்டம் கடுமையாக இருந்ததால் அவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசங்களை முறையாக அணியாமலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒற்றைக் காலில் நின்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு