திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர், ஆனால் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் சமூக இடைவெளியை பின்பற்ற தொழிலாளர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 100க்கும் மேற்பட்டோர்க்கு அவர்களது வங்கி கணக்குகளில் நபர் ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாய் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் தொழிலாளர்களை தனித்தனியாக அழைத்து வங்கி கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீதமுள்ள ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சத்தால் வேலையின்றி குழந்தைகளை வைத்துக்கொண்டு உணவிற்கே வழியில்லாமல் தவித்து வரும் நிலையில் அரசு வழங்கிய இந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல்துறை ஆய்வாளர் சாலமோன் ராஜா அப்பகுதி இளைஞர்களிடையே சமரச பேச்சில் ஈடுபட்டு சமூக இடைவெளியை பின்பற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் ஊராட்சி செயலாளர், ஊராட்சித் தலைவர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி - சேவா பாரதி அமைப்பினர் அசத்தல்