திருவண்ணாமலை : செங்கம் அருகே காயம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதேவி. அதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருபவர் இந்திரா.
இவருக்கு 2017 முதல் 2020 வரை 32 மாதத்திற்கான சம்பள நிலுவைத் தொகை ரூபாய் 24 ஆயிரத்து 940 வழங்ககுமாறு ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதற்கு 5 ஆயிரம் பணம் கொடுத்தால் கையெழுத்திட்டு காசோலை வழங்கப்படும் என ஊராட்சி செயலாளர் கூறியுள்ளார். .
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக தூய்மைப் பணியாளர் இந்திரா தெரிவித்ததை ஏற்காத ஸ்ரீதேவி, முழுப்பணம் கொடுத்தால் மட்டுமே நிலுவைத்தொகை மனு ஆவண செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் இந்திரா புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீதேவியிடம் 5 ஆயிரம் ரூபாயை இந்திரா அளித்துள்ளார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீதேவி, இரண்டு கைகளாலும் மிரர் ரைட்டிங் எழுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கின்னஸ் சாதனை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.