திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் வேட்டவலம், திண்டிவனம், அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. அதே போன்று திருக்கோவிலூரிலிருந்து வரும் பேருந்துகள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. இந்த 2 வழி தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்படுவதால் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், திருக்கோவிலூர் வழியில் இயக்கப்படும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் மேம்பாலப் பணி நிறைவு பெறும் வரையில் காந்திநகர் மைதானம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.