தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக 2020-2021ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஏப்ரல் மாதம் நடைபெறும் செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இத்தேர்விற்கு கட்டணம் செலுத்தியவர்கள், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா காலத்தில் நடைபெறாத அரியர் தேர்வு மீண்டும் நடைபெறும். இதற்கான தேர்வு கட்டணம் வசூலிக்கவும் கல்லூரிகளுக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் இன்று (பிப்.13) வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "முதலமைச்சர் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் மற்றும் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்திருந்தார். ஆனால், தற்போது மீண்டும் தேர்வு நடத்தப்படும் எனக் கூறி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வேண்டுமானால் மீண்டும் நடத்திக் கொள்ளட்டும். ஆனால், 2ஆவது முறையாக தேர்வுக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க மாட்டோம்" என்றனர்.
இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், மாணவர்களின் கோரிக்கைகள் பல்கலைக்கழகத்திடம் தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளது. பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு!