திருவண்ணாமலை, ஆரணி அருகேயுள்ள சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15ஆம் தேதி இரவு, சுமார் பத்து மணியளவில், ஆறுமுகம்(70) தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தனர்.
பின் ஆறுமுகம் ஒரிடத்தில் நிற்கவே, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும், இவரை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இக்கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனடிப்படையில், ஆரணி துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மூன்று கொள்ளையர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன்(26), பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி(28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளி சூரியா(24) என்பவரை, வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.