திருவண்ணாமலை: ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்திலுள்ள மலையொன்றிலிருந்து கம்பி கயிறு பாதை அமைத்து கயிறு மூலம் பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதே கம்பி பாதையின் வழியாக கள்ளச்சாராய பாக்கெட்டுகளை சிலர் கீழே இறக்கி அனுப்பி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
விற்பனை செய்வதைத் தடுக்கும் இளைஞர்களை கள்ளச்சாராய வியாபாரிகள் துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயனுக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்று (அக்.5) காவல் ஆய்வாளர் புகழ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பூசிமலைக்குப்பம் கிராம இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மலைமீது விற்று வந்த கள்ளச்சாராயத்தை தடுக்கும் பணியில் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் வருவதைக் கண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் மலைமீது இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் மலையில் விற்பனை செய்த 300 கள்ளச்சாராய பாக்கெட்டுகள், 250 லிட்டர் கள்ளச்சாராயம், கள்ளச்சாராயத்தை அடைத்து கொண்டுவரப்பட்ட ஐந்து லாரி ட்யூப்கள் மற்றும் மலையின் மேலிருந்து மழையின் கீழ் வரை அமைக்கப்பட்ட கள்ளச்சாராய கம்பி வழிப்பாதை உள்ளிட்டவைகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.
மேலும், வேலூர் மாவட்டம் அமிர்தி வனப்பகுதி கிராமங்களில் இருந்து கள்ளச்சாராயத்தைக் கொண்டு வரப்பட்டு ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்ளிட்டப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் இரண்டு என்கவுன்ட்டர்களில் சுட்டுக்கொலை!