திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு தோட்ட கலைப் பயிர்களை பயிரிட்டுவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அதிகளவு வெண்டைக்காய் பயிரிடப்பட்டுவருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பால் வெண்டைக்காய் போதிய விலை இல்லாததால், பறிக்காமல் விவசாய நிலத்தில் உரமாகவும் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டுவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு மாத பயிரான வெண்டைக்காய் அறுவடை பணிகள் தொடங்கியதும், அதை திருவண்ணாமலை மற்றும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
ஆனால் ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய்வரை மட்டுமே விற்பனையாவதாகவும், அது அறுவடை செய்யும் கூலிக்கே கிடைக்காததால், வெண்டைக்காய்களை பறிக்காமல் நிலத்திலேயே விட்டுவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீணாகும் வெண்டைக்காய்களை அரசு நேரடி கொள்முதல் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.