திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளில் இருந்து 269 பேருந்துகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கத் தீர்மானிக்கப்பட்டு போக்குவரத்து கழகம் மூலம், இன்று அதிகாலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவதற்காக, இன்று காத்துக்கொண்டிருக்கிறது.
எனினும், திருவண்ணாமலை மாவட்டம், கரோனா வைரஸ் தாக்கத்தில் சென்னை, செங்கல்பட்டை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதன் விளைவாகப் பேருந்தில் பொதுமக்கள் பயணம் செய்ய அச்சப்பட்டு, வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக நீண்டநேரம் காத்திருந்த பேருந்துகள் காலியாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கையுறை, முகக் கவசம் அணிந்து பேருந்தை இயக்க வேண்டும்; பணிமனைகளில் இருந்து பேருந்தை எடுக்கும் போதும், பணிமனைக்குத் திரும்பும் போதும், கிருமிநாசினி தெளிக்கவேண்டும்; பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்; அவர்களுக்கு கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்டு, வெப்பத்தை பரிசோதித்த பின்னரே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.