திருவண்ணாமலை தேவனந்தல் கிராமத்தின் முதல் தெருவைச் சேர்ந்த கண்ணையன் மகன் கோவிந்தசாமி (28).
இவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 1000 ரூபாயை வழிப்பறிசெய்ததாக புகார் செய்ததன் அடிப்படையில் சரவணன் (21), விக்னேஷ் (20) ஆகியோரை திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பாரதி, தனிப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இதேபோன்று, திருவண்ணாமலை தாலுகா நூக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சிவகுமார் (24) தனது பூக்கடைக்குச் செல்லும்போது கத்தியைக் காட்டி அவரிடமிருந்த செல்போன், 1100 ரூபாய் வழிப்பறி செய்த பார்த்தசாரதி (25), கோபால கிருஷ்ணன் (19) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேற்கண்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நால்வரையும் வேலுார் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆண்டில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 87 நபர்களைக் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.