திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலம் மற்றும் சத்துத்துணவுத் திட்டத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரங்களைச் சார்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை தொடக்கி வைத்தார்.
இவ்விழாவில், புடவை, மாலை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கள பொருட்கள், இனிப்பு, பரிசுப் பொருட்கள், சீர்வரிசை ஆகியவைகளுடன் அறுசுவை உணவும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்பின் விழாவில் பேசிய அமைச்சர், 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 13,600 கர்ப்பிணிகளுக்கு 34 லட்சம் ரூபாய் செலவிலும், நடப்பாண்டில் இரண்டாயிரத்து 720 கர்ப்பிணிகளுக்கு 6.80 லட்சம் செலவிலும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ்விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எப்.ஐ.ஆர் பதிவு செய்வது தொடர்பாக போலீசாருக்குப் பயிற்சி!