திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இந்த சமய அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, மொத்தம் 408 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை அனைத்து குழுக்களுக்கும் வழங்கினார்.
பின்னர், சேவூர் ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது, “திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2016 - 17ஆம் ஆண்டு, 2017 - 18ஆம் ஆண்டுகளில் மாநிலத்திலேயே முதலாவதாக இடம் பிடித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ஜெயலலிதாவின் அரசு எப்போதும் மகளிருக்கு சிறப்பானத் திட்டங்களை அளிக்கக்கூடிய அரசு. அந்தவகையில், இந்த அரசு அளிக்கக்கூடிய கடன் தொகைகளை குறித்த காலத்தில் திருப்பி செலுத்தினால் இந்த அரசு உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாக செல்லிடப்பேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது .
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் முதலாக ஐந்து லட்சம் ரூபாயாக இருந்த கடன் தொகையானது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி நான்கு மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.