திருவண்ணாமலை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் எனும் திட்டம் திருவண்ணாமலையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 17 ஆயிரத்து 963 மனுக்கள் பெறப்பட்டன.
தேர்தலில் வென்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 100 நாள்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தினையும், தனி துறையையும் உருவாக்கினார்.
427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (ஆக.6) 427 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 158 பயனாளிகளுக்கு, ரூ. 2 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
முன்னதாக, ஏழாவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு கைத்தறி, விற்பனை கண்காட்சியையும் அமைச்சர் எ.வ. வேலு தொடங்கிவைத்தார்.
பசுமையான மாவட்டமாக மாற்ற
நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “செய்யாறு அருகே இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலைகளில் உள்ள சி.ஆர்.எஸ் நிதி மூலம், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, திருவண்ணாமலையை பசுமையான மாவட்டமாக மாற்ற சிப்காட் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் முருகேஷ், சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, செங்கம், கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை - பக்தர்கள் வரவேற்பு