திருவண்ணாமலை: தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தால், கடந்த இரண்டு நாள்களாக ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்தது, மின் கம்பிகள் அறுந்து விழுந்தது, சுவர்கள் இடிந்து விழுந்தது, குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனை சரிசெய்யும் பணியில் வருவாய் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியது. முன்னதாக ஏரியின் கரையைப் பலப்படுத்த பொதுப்பணி துறையினர் மூலம் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஏரியில் மழை நீர் நிரம்பியதைக் கண்ட பொதுப்பணி துறையினர், களங்கள் சுவற்றை உடைத்து மழை நீரை வெளியேறச் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஏரியிலிருந்து அதிகளவில் நீர் வெளியேறியது. மேலும் அருகிலிருந்த குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. அப்பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு முழுவதும் மழை நீரானது சூழ்ந்து கொண்டதால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் தாக்கம்: வீட்டின் மீது இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்!