திருவண்ணாமலை பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிறை சென்று திரும்பிய குற்றவாளி பிரபாகரன் (வயது 27). மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் இவர், நகர் பகுதியிலுள்ள திண்டிவனம் ரோடு, ரயில்வே கேட் அருகில் உள்ள மல்லிகா பர்னிச்சர்ஸ் கடை, வேலூர் சாலையில் உள்ள ஜே.கே ஆட்டோ ஏஜென்ஸி, யமஹா ஷோ ரூம், காஞ்சி சாலையில் உள்ள ஆர்.பி.எஸ் ஹோண்டா ஷோ ரூம் போன்ற பல கடைகளை உடைத்து திருடியுள்ளார்.
இந்நிலையில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபாகரனின் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்த அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரைத்தார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவரைக் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், குற்றப்பிரிவு காவல் துறையினர் பிரபாகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 98 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் நகை, பணத்திற்காக முதியவர் கொலை: 3 இளைஞர்கள் சிறையில் அடைப்பு