திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு நேற்று ஏராளமான வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் குவிந்தனர். உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாள் என்பதால் அதிகளவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியவற்றிற்கான வேட்புமனுக்கள் தனித்தனியே பெறப்பட்டன. காவல் துறையினர் வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் இரண்டு நபர்களை மட்டும் அனுப்பி சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணியை நடைமுறைப்படுத்தினர்.
இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கடைசி நாளாகும். பின்னர் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் நடைபெறும்.
இதையும் படிங்க: கள்ளச்சாரய விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி மனு!