திருவண்ணாமலை: ஆரணி அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி சுந்தர். இவரது நிலத்தின் அருகில் நேரு - சகாதேவன் சகோதரர்களின் நிலம் உள்ளது. முன்னதாக இருதரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு விவசாயி சுந்தரை, நேரு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சகாதேவன், சடையாண்டி, சேட்டு, சக்திவேல் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது அவரை விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சுந்தர் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், ஆரணி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இதில் சம்மந்தபட்ட 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த கொலை வழக்கு ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (ஜன.31) மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா, கொலை வழக்கு சுமத்தபட்ட நேரு, சகாதேவன், சேட்டு, சடையாண்டி, சக்திவேல் மற்றும் வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற நேரு உள்ளிட்ட 6 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: குடும்பத்தகராறில் தந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய மகன்.. போலீசார் வலைவீச்சு!