திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துகுமார், அப்பகுதியிலுள்ள ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மணலைக் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் ஏரியிலிருந்து மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், தொடர்ந்து ஏரியில் இருந்து முத்துகுமார் மணல் அள்ளிவந்துள்ளார். இதனை, தற்போதைய ஊராட்சி மன்றத்தலைவர் சின்னசாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த முத்துகுமார் அவர்களை லாரியை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் மீது முத்துக்குமார் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முத்துகுமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தச்சம்பட்டு காவலர்கள் முத்துகுமாரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் கீழ்கச்சிராப்பட்டு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தன்னை தட்டிக் கேட்ட கிராம மக்களை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் காட்டி முத்துகுமார் மிரட்டியுள்ளார். இந்நிலையில், முத்துகுமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
பொதுமக்கள் முன்னதாக அளித்த புகாரின் மீது மாவட்ட நிர்வாகமும் வட்டாட்சியரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மணல் திருட்டைத் தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சித் தலைவர்