திருவண்ணாமலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று (ஜூன்15) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது. பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ஆவூடையார்கோயில் 435 வீடுகள் கட்டாமல், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊழல்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டறிந்து வெளியிட்டு வருவதால் தமிழ்நாடு அரசு பின்வாங்கி மாட்டி கொள்கிறது என்றார்.
திமுகவின் சித்தாந்த செயல்பாடுகளை கடுமையாக எதிர்கின்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 35 நாட்களில் 7 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒரு துறை உள்ளதா? என்ற நிலை உள்ளது. பாஜகவைப் பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினால் மட்டுமே அதற்கு பதில் அளிக்க முடியும். அக்கட்சியில் மற்றவர்கள் பேசுவதற்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
ஆன்மீகவாதிகள் கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், நாத்திகவாதியான கருணாநிதிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாஜக சார்பில் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: காவி துண்டு அணிந்தவர்களை தொட்டு பார் - சேகர்பாபுவுக்கு ஹெச். ராஜா சவால்