திருவண்ணாமலை: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின், மகன் எ.வ.வே.கம்பனுக்கு சொந்தமான வீட்டில் இன்று (நவ. 5) 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணித்துறை கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கிடைத்த புகார் மற்றும் கடந்த முறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் அவணங்களின் அடிப்படையிலும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு கிராமத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, கம்பன் மகளிர் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் கல்லூரி என அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல், தொடர்ந்து மூன்றாவது நாளாக 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் வட்டாரம், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுழற்சி முறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் எ.வ.வேலு மகன் எ.வ.வே.கம்பனுக்கு சொந்தமான வீட்டிலும் வருமானவரித் துறையினர் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கின?