கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு நோய்த் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளதால் புதியதாக நோய்த் தொற்றைத் தடுக்க முனைப்புடன் செயல்படுகிறது. கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வெளிமாநில லாரிகள் பண்ணாரி சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, லாரி ஓட்டுநர் இறக்கி விடப்படுகிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து வந்த 10 லாரி ஓட்டுநருக்கு நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பண்ணாரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஓட்டிவந்த லாரிகளுக்கு கிருமி நாசினி தெளித்தபின், உள்ளூர் ஓட்டுநர்களை பயன்படுத்தி லாரிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லாரி ஓட்டுநர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால், அவர்கள் ஓட்டி வந்த காய்கறி லாரி, கிருமி நாசினி தெளித்து அனுப்பப்படும் என டிஎஸ்பி சுப்பையா தெரிவித்தார்.
இதையும் படிங்க:
அத்தியாவசிய பொருள்கள் என்ற பெயரில் தோல்களை இறக்குமதி செய்த லாரிகள், தொழிற்சாலைக்குச் சீல்!