திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடத்த முயற்சித்தனர். ஆனால் அண்ணா நுழைவுவாயிலில் தொடங்கிய பேரணி, தென்றல் நகர் பேருந்து நிறுத்தத்திலேயே முடிவுக்கு வந்தது.
முன்னதாக இந்தப் பேரணியில் 'அரைகுறை வேலை கொடுக்காதே, படிப்புக்கு ஏற்ற வேலை கொடு' என்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஊழல் மையமாக மாறியுள்ள டிஎன்பிஎஸ்சி-இன் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் எல்ஐசி, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது எனவும், 'வேலைவாய்ப்பை பறிக்காதே, அரசுப் பணிகளை ஒழிக்கும் அரசாணை எண் 56ஐ வாபஸ் பெறவும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்திடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக வந்த பொழுது, தென்றல் நகர் பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழல்நிலவியது.
இதையும் படிங்க: பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் ரயில்வே காவல் துறையினர்