திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயன்குல தெருவில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஆகஸ்ட்.3) நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி, குளோரின் பவுடர் தூவி சுத்தம் செய்த பின்னர் வங்கி கிளையை மூடி விட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை திடீரென வங்கி ஊழியர்கள் வங்கி கிளையை திறந்து பணியில் ஈடுபட்டு வருவது நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகராட்சி ஊழியர்கள் வங்கிக்கு வந்து, இங்கு பணியாற்றி வந்த ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கியை பூட்டி சீல் வைத்தனர்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கி நான்கு நாளே ஆன நிலையில் மாதச் சம்பளம் எடுப்பவர்கள், பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் உள்ளிட்ட பல வாடிக்கையாளர்களும் வங்கி கிளையை வந்து பார்த்துவிட்டு, திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.