தளர்வற்ற ஊரடங்கு அமலில் இருந்த நேற்று (ஆகஸ்ட் 16) திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே உள்ள விஜயலட்சுமி கோபால் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அரசு உத்தரவை மீறி, மறைமுகமாக வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்தனர்.
இந்த பெட்ரோல் பங்க் மிக அருகாமையில் கிழக்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. காவல் துறை மற்றும் அரசு அலுவலர்களின் துணையோடு பெட்ரோல் பங்கில், அரசு உத்தரவை மீறி பெட்ரோல் விற்பனை நடைபெற்றதாக பொதுமக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரும், அரசின் திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு அலுவலர்களும் பணியாற்றும் அலுவலகங்களுக்கு அருகிலேயே, இவ்வாறு அரசு உத்தரவை மீறி பெட்ரோல் விற்பனை நடைபெற்றதை கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வேடிக்கை பார்ப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு காவல் நிலையம் மட்டுமன்றி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், இவை அனைத்தும் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் பங்கிற்கு அருகாமையில் தான் அமைந்துள்ளது.