திருவண்ணாமலை: கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பில் அருளாளர் அருணகிரி நாதர் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ”வயோதிகரைப் பற்றி அருணகிரி நாதர் பாடிய சந்தத்தைப் பற்றி எடுத்துரைத்து, முனையழிந்தது, மெட்டி குலைந்தது, வயது சென்றது என்ற சந்தத்தை மேற்கோள்காட்டிப் பேசினார். தற்போது உள்ள இசையமைப்பாளர் இளையராஜா இந்த சந்தத்தைப் பயன்படுத்தி மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலை வடிவமைத்தார்.
15ஆம் ஆண்டு நூற்றாண்டில் திருவண்ணாமலை மண்ணில் பிறந்த அருணகிரி நாதர் சந்தம் அமைத்தார். அந்த சந்தத்தைப் பயன்படுத்திப் பல இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர். மேலும் திருப்புகழைப் பாரதியார் பயன்படுத்தி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். கானி நிலம் வேண்டும் பராசக்தி, கானி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியுள்ளார். இது மட்டுமின்றி கவிஞர் கண்ணதாசனும் அருணகிரி நாதர் சந்தத்தைப் பயன்படுத்தி பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிரபல தனியார் உணவக சாம்பார் இட்லியில் மிதந்த புழு - உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!