திருவண்ணாமலை: வாணாபுரம் அடுத்த பேராயம்பட்டு கிராமத்தில் திருமலை - சுமதி தம்பதி வசித்து வந்தனர். இதில் சுமதி, குடும்ப வறுமை காரணமாக வீட்டு வேலைகளுக்காக அவ்வப்போது ஓமன் தலைநகரம் மஸ்கட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சுமதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மீண்டும் மஸ்கட்டுக்குச் செல்வதற்காகத் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் அங்குப் பாதுகாப்பு இல்லாத சூழலிலிருந்து வருவதாகவும், குறிப்பாகக் கடந்த 4 நாட்களாகத் தனது மனைவி உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்களை ஓர் அறையில் பூட்டி வைத்து உணவு, குடிநீர் வழங்காமல் முகவர்கள் துன்புறுத்துவதாகவும், எனவே தனது மனைவியை மீட்டுத் தருமாறும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கணவர் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் தனது மனைவியை மஸ்கட்டுக்கு அனுப்பி வைத்த தனியார் ஏஜென்ட் மஞ்சுநாதனிடம் சென்று கேட்டதற்கு, “என்னால் எதுவும் செய்ய இயலாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் திருமலை வெளியிட்டுள்ளார். அதேபோல் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகச் சுமதி பேசும் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாய் கடத்தல்; மகன் அளித்த புகாரில் 5 மணிநேரத்தில் மீட்டுத்தந்த போலீஸ்