திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள நடராஜர் ஓவியத்தின் முகப்பகுதியில் துளையிட்டு, மின்விசிறியை மாட்டிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, கோயில் நிர்வாகம் மின்விசிறியை அகற்றியுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இந்த திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம், நவராத்திரி உற்சவம் மற்றும் சாமி புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக, அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மண்டபங்களின் மேற்கூரைகளில் பல்வேறு கலைநயமிக்க தொன்மை வாய்ந்த மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். சமீப காலங்களில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள நடராஜர் மூலிகை ஓவியத்தின் முகத்தில் துளையிட்டு மின்விசிறி மாட்டப்பட்டு இருந்தது. இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது.
மேலும், இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தற்போது கோயில் நிர்வாகம் தரப்பில், நடராஜர் ஓவியத்தின் முகத்தில் மாட்டப்பட்ட மின்விசிறியை அகற்றி உள்ளனர்.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே கால்வாயில் கொட்டப்பட்ட 2,000 ஆவின் பால் பாக்கெட்டுகள்.. மாநகராட்சி கொடுத்த விளக்கம் என்ன?