திருவண்ணாமலை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களை கடத்தி வந்த கணவன், மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் உத்தரவின் பெயரில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கண்டறிய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனந்தல் கிராமத்தில் மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் நசுரூதின் தலைமையில் தலைமைக்காவலர் சின்னதுரை, தனிப்பிரிவு தலைமைக்காவலர் பலராமன், தனிப் பிரிவு முதல்நிலை காவலர் மோகன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபொழுது 98 பாக்கெட்டுகள் கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதன்மதிப்பு சுமார் 40 ஆயிரம் ரூபாய் எனத்தெரிவிக்கும் போலீசார் இது குறித்து காரில் பயணம் செய்த கணவன், மனைவி ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் சோமசிப்பாடி கிராமத்தைச் சார்ந்த ஜான்பாஷா என்பதும் அவரது மனைவி ஹஜீரா என்பதும் தெரியவந்தது. மேலும் மங்கலம் காவல் நிலைய போலீசார் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தி வந்த கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை