திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தீபத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். மகா தீபத்தின் போது பக்தர்கள் துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை எடுத்து வருவோருக்கு வெள்ளி நாணயம், தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டு வந்த பொது மக்களுக்கு 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10ஆம் தேதி மாலை 6 மணிவரை குலுக்கல் முறையில் தங்க நாணயத்திற்கு 12 பேரும், வெள்ளி நாணயத்திற்கு 72 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, தனது அலுவலகத்தில் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தி.பா.விஸ்வநாதன் கூறுகையில், ' மகா தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு துணிப்பை, சணல் பை கொண்டு வந்த 30 ஆயிரம் பேருக்கு வெள்ளி நாணயம், தங்க நாணயம் குலுக்கல் டோக்கன் வழங்கப்பட்டது.
இதில் 45 நபர்களுக்கு வெள்ளி நாணயமும், 11 நபர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு அவர்கள் வெற்றி பெற்றது குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் பரிசாக டோக்கன் பெற்ற அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது’ என்றார்.
இதையும் படிங்க:
தீப திருவிழா - ஏழாவது நாளான இன்று ஐந்து தேர்கள் பவனி!