திருவண்ணாமலையை சேர்ந்தவர் சரவணன். மரச்செக்கு வியாபாரி. இவரை மூன்று நாட்களுக்கு முன்பு காப்பலூர் கூட்டு ரோட்டில் ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்திச் சென்றது. கணவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சரவணன் மனைவி, கணவரை கண்டுபிடித்து தரக்கோரி திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து 3 சிறப்பு படை அமைத்து சரவணனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்
இந்நிலையில், மனைவியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய கடத்தல் கும்பல், ரூ.50 லட்சம் கொடுத்தால் சரவணனை திருப்பி அனுப்புகிறோம். போலீசிடம் கூறினால் சரவணனை கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரிடம் கூறாமல், உயிர் பயத்தில் முதலில் ரூ.15 லட்சத்தை ஏற்பாடு செய்து, கடத்தல்காரர்களிடம் சரவணன் மனைவி அளித்துள்ளார். மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தால்தான் திருப்பி அனுப்புவோம் என்று அலைக்கழித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சரவணனின் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடந்த காவல்துறையினர், அவரை பின்தொடர்ந்தனர். அப்போது, வேட்டவலம் அருகே உள்ள கெடார் பகுதியில் மறைந்திருந்த ஐந்து கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வியாபாரி சரவணனை உயிரோடு மீட்டனர். தப்பி ஓடிய தர்வேஷ் மற்றும் காசி ஆகியோரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம், திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.