திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் திங்கள் தின குறைதீர்வு முகாமுக்கு வருபவர்கள் 500 பேருக்கு ஒவ்வொரு வாரமும் இலவசமாக உணவு வழங்க இறைவனின் சமையலறை என்ற புதிய கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கட்டடத்தை திறந்துவைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுகளை வழங்கி பரிமாறினார்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் வாராந்திர குறைதீர்வு முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூர தொலைவு பயணம் செய்து காலையில் உணவு உண்ணாமல்கூட வந்து காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அவர்கள் பசியில் வாடாமல் இருக்க வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் நலன்கருதி இறைவனின் சமையலறை மூலம் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று 500 நபர்களுக்கு இலவச உணவு அளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை வேங்கிக்கால் ஊராட்சி மூலம் செயல்படுத்துகிறார்.
இன்று தொடக்க விழாவின்போது மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு காய்கறி சோறு, தயிர் சோறு, கேசரி, மிக்சர், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.