திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் அருகேவுள்ள முக்குரும்பை கூட்டு ரோடில் களம்பூர் காவல் துறையினர் நேற்று (ஜூன்.02) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர் .
அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், 13 பெட்டிகளில் 660 வெளி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆரணியை அடுத்த முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (35), பார்த்திபன் (31) , மகேந்திரன் (40) , திலிப்குமார் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், வேனையும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்களை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர் .