திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமப்பகுதியில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயிலில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏந்தல், தேவானந்தல், பள்ளிகொண்டாபட்டு, சின்னகாங்கேயனூர், ஐந்து வீடு ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்கள் குலதெய்வமாக முனீஸ்வரனை வழிபட்டு வருகின்றனர். தற்போது கரோனா தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (ஆகஸ்டு 9) ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், 300க்கும் மேற்பட்டோர் தங்களது குலதெய்வமான முனீஸ்வர சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபடுவதற்காக, கரோனா அச்சம் சிறிதுமின்றி தலையில் பொங்கல் கூடை வைத்து, நீண்ட தூரத்திற்கு கூட்டமாக தொடர்வண்டி போல் செல்கின்றனர். முனீஸ்வரனுக்கு விருந்து கொடுப்பதற்காக ஆடு, கோழி, பன்றி உள்ளிட்டவற்றை கொண்டுவந்து சாரையாக அமர்ந்து, அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்தனர்.
கரோனா நோயின் தொடக்கத்தில், ஒரு கிராமத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அந்த கிராமத்திலிருந்து யாரும் வெளியேறாத வகையிலும், வெளியிலிருந்து உள்ளே செல்லாத வகையிலும் தடை செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அந்த நிலையெல்லாம் தலைகீழாக மாறி, கோயிலில் ஒன்றுகூடிய மக்கள் வசிக்கும் கிராமத்திலும் கரோனா தொற்று பாதிப்பு இருக்கின்ற போதிலும், ஒன்று கூடி பொங்கல் வைத்து விழா கோலம் பூண்டிருக்கிறது வியப்பை அளிக்கிறது.