திருவண்ணாமலை: இந்தியாவின் மிகப்பெரிய வறுமை ஒழிப்பில் பங்காற்றிக் கொண்டிருக்கும் திட்டமாக மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வறுமையில் இருந்து மீண்டு வருகிறார்கள்.
தற்போது அனைத்துப்பொருட்களின் விலையும் 300 மடங்கு அளவிற்கு உயர்ந்து உள்ளதால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், அதேபோல் ரூ.270 என கொடுக்கப்படும் கூலியை 300 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயி சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.
தொடர்ந்து கூழ் என்பது 100 நாள் வேலைத் திட்டம் என்றும், மீசை என்பது விவசாயம் என்றும், இதனால் கூழ் குடிக்கும் போது சிறிது அளவு மட்டுமே மீசையில் படும் என்பதால், இதை சித்தரித்து காட்டும் வகையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மீசையில் படாமல் கூழ் குடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் சொந்த செலவில் மாணவர்களுக்கு 30 டேப்லெட்கள் வழங்கல்