சென்னை - சேலம் வரையில் அமைக்கப்படும் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கம் பகுதியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சார்பில் இன்று (அக்.,22) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகளான திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸிட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் எட்டு வழிச்சாலைக்காக வரும் 2021ஆம் ஆண்டு முதல் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதைக் கண்டித்தும், எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களின் (விவசாயிகள்) அனுமதியின்றி நிலங்களைக் கைப்பற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ததை கண்டித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மருத்துவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேசினார். எட்டு வழிச்சாலை திட்டத்தால் விசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எட்டு வழிச்சாலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் ஆளும் அதிமுக அரசு மேல்முறையீட்டு செய்து வருவது விவசாயிகளை வஞ்சிக்கும் வண்ணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட துணை செயலாளரும் புதுப்பளையம் ஒன்றிய குழு பெருந்தலைவருமான சுந்தரபாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மனோகரன் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்