திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் சென்ற ஜூன் 18ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டு நேற்று (ஜூன் 19) முதல் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 20) காலை கரோனா நோய்த் தொற்றால் விவசாயி உயிரிழந்தார், அவரது உடலை சுகாதாரத் துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர், காவல் துறையினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பான முறையில் திருவண்ணாமலை நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் கொண்டுவந்து தகனம் செய்தனர்.
அவரது மகன், மகள் உள்பட உறவினர்கள் நீண்ட தூரத்திலிருந்து உடலை கூட பார்க்க முடியாமல் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.