மதுரை: மதுரை மண்டலத்திற்குட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதாக வெளியான ஆர்டிஐ (RTI) தகவல் அதிர்ச்சி தருவதாகவும், இதனால், பல்வேறு வகையிலும் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியன் குரல் என்ற அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆர்டிஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன், மதுரை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, மின் பகிர்மான அலுவலகங்களில் தற்போதுள்ள கம்பியாட்கள் (வயர்மேன்கள்) எண்ணிக்கை, காலியாக உள்ள பணியிடங்கள் உள்பட மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதற்கு ஆர்டிஐ தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. சுமார் 52 பக்கங்களைக் கொண்ட அந்த பதிலில், மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளர் பொறுப்பில் உள்ள மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,267 கம்பியாட்கள் (வயர்மேன்) பணியிடங்களில் 375 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ள நிலையில், 892 காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், "70 சதவிகித கம்பியாட்கள் காலிப்பணியிடம் காரணமாக, கிராமப்புறங்களில் ஏற்படும் மின் தடைகளைச் சரி செய்ய ஆட்கள் இல்லை. இதன் காரணமாக, அந்தந்த பகுதிகளில் மின் கம்பம் ஏறத் தெரிந்தவர்கள், மின் வாரியத்திற்குத் தொடர்பில்லாத நபர்கள் மின்மாற்றியை (டிரான்ஸ்ஃபார்மர்) அணைத்துவிட்டு, ஃபியூஸ் போடும் அவல நிலை உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி மட்டும் இவ்வளவு கோடியா? - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இந்த வேலைக்காக பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கட்டணமாகப் பெறுகிறார்கள். தரமான ஃபியூஸ் கட்டைகளை போடாததன் காரணமாக விரைவாகவே மின் துண்டிப்பு ஏற்படுகிறது. அதனால், விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் அதிகமாகப் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ஆகையால், மின் வாரியம் கம்பியாட்கள் பற்றாக்குறையைப் போக்க, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.