திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபு-கவிதா. இவர்கள் இருவரும் இணைந்து மளிகைக் கடை நடத்தி வந்தனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா திருமணமான பெண்களுக்கும், கல்லூரிப் பெண்கள் பலருக்கும் மளிகைக் கடையிலேயே கருக்கலைப்பு செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே, இத்தம்பதியை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிரபு-கவிதா தம்பதி நள்ளிரவில் கலசப்பாக்கம் அருகே லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்தபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு-கவிதா தம்பதி நடத்தி வந்த மளிகைக் கடையை ஆய்வு செய்தனர். கடையிலேயே கட்டில், மெத்தை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்புத் தொழில் நடைபெற்று வந்தது அதில் தெரியவந்தது. இதனையடுத்து மளிகைக் கடைக்கு உடனடியாக சீல் வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கல்லூரிப் பெண்கள் உட்பட தினமும் மூன்று முதல் நான்கு பேருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர் என்றும், இதுவரை நான்காயிரம் கருக்கலைப்புகள் வரை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், போலி மருத்துவர்கள் மீதும், முறையான அனுமதி பெறாமல் ஸ்கேன் செண்டர்கள் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கைவிடுத்தார்.