திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கையின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை இரண்டாவது வார்டு அம்பேத்கர் தெருவில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்க்கையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
ஒரு கோடி உறுப்பினர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ப்பதற்காக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''சமுதாயப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி சாதியே கிடையாது என்ற வகையில் சமத்துவபுரத்தை உருவாக்கியவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி'' என்றும் எ.வ.வேலு உரையாற்றினார்.
''கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்ட போதிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஏழை எளிய மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும், குறிப்பாக ஆதி திராவிட மக்களுக்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். மேலும் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல திட்டங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.
அருந்ததிய இன மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அருந்ததிய இன மக்கள் பல உயர் பதவிகளில் இருக்கக் காரணமானவரும், கலைஞர் கருணாநிதி தான்’’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ''தமிழர்கள் நலனுக்காக, தமிழர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக, தமிழர்களின் சமுதாயம் மேம்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்'' என்றும் கூறினார்.
''மேலும் தற்போதைய திமுக ஆட்சியில் பெண்களுக்கு என்று பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்ததன் விளைவாக ஆண்களை விட பெண்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்முறையாக மாநகராட்சி சேவைகளைப் பெற க்யூஆர் கோடு ஸ்கேன் - தஞ்சையில் அறிமுகம்!