திருவண்ணாமலை: தெற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 480 அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் பதித்த கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று திருவண்ணாமலை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 480 அண்ணா பேரவை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவம் பதித்த கைகடிகாரங்களை வழங்கினர்.
பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக அரசு 530 தனியார் பேருந்து ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவித்தவுடன் திமுக தொழிற்சங்கம் மற்றும் அதன் 8 கூட்டணி சங்கங்கள் இணைந்து 5 மணி நேரம் போராட்டம் நடத்துவதாக கூறி வேலை நிறுத்தம் என்ற நாடகத்தை நடத்தி விட்டுச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு அதிமுக மற்றும் தோழமை சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், தற்போது ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 430 தனியார் ஓட்டுநர்களை நியமித்து உள்ளது. இதற்கு திமுக மற்றும் அதன் தோழமை தொழிற்சங்கங்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை. அரசு தரப்பிடம் இருந்து தொழிற்சங்கங்களுக்கு பல விதத்தில் செட்டில் செய்ய உள்ளதாகவும், இதனை எதிர்த்து அண்ணா திமுக தொழிற்சங்கம் மிக விரைவில் தொழிலாளர் நலன்களுக்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்” என்றும் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
தனியாரிடம் போக்குவரத்து துறை ஒப்படைக்கப்படமாட்டாது எனக் கூறி வந்த திமுக அரசு என்ற பூனை, தனியார் ஒப்பந்தத்தில் ஓட்டுநர்களை நியமித்ததன் மூலம் போக்குவரத்து துறை தனியாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக தாரை வார்க்கப்படுகிறது என்பதுதான் நிஜம் என்றும், 430 தனியார் ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது பதுங்கி இருந்த பூனை வெளியே வந்து விட்டது என்பதைப் போன்று உள்ளது என அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மேலும், கரோனா காலகட்டத்திலும் கூட எட்டு மாதம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கொடுத்து போக்குவரத்து தொழிலாளர்களை அரவணைத்த அரசு எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு என்றும், ஆகவே தொழிலாளர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை திமுக பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இல்லை என்றால் அனைத்து தொழிலாளர்களின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும், தவறான முறையில் ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார் என நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து அவர்கள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என கமலக்கண்ணன் கூறினார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: ‘இதனால் திமுகவினருக்கு மட்டுமே நன்மை’ - ஜெயக்குமார்