திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்டச்செயலாளராக வி.எம்.நேரு கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தற்சமயம் கழகத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகளை தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மாவட்ட கழகச் செயலாளராக உள்ள நேரு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர நிர்வாகிகளை தேர்வு செய்யும் போது கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேப்டன் மன்றத்தில் உள்ளவர்களின் பதவிகளைப் பறித்து, புதிதாக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சிக்கு உழைக்காமல் அவருக்கு துதிபாடுபவர்களுக்கும் பணம் வாங்கிக் கொண்டு பதவிகள் வழங்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொண்டர்களின் வீட்டில் நடக்கும் எந்த சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை எனவும்; தொண்டர்களை சமுதாய ரீதியாக பிரித்து வருவதாகவும், பல குற்றச்சாட்டுகள் இவர் மீது நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை அறிவொளி பூங்கா முன்பு மாவட்டச் செயலாளரை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும் முன்னாள் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர பொறுப்பாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர்கள் சிவமூர்த்தி, குமார், தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், தண்டராம்பட்டு ஒருங்கிணைந்த கேப்டன் மன்ற முன்னாள் செயலாளர் எம். கார்த்திகேயன், மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலாளர்கள் சிகாமணி, மா. கோவிந்தன், செங்கம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராபர்ட் உட்பட தேமுதிகவினர் பலர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.