திருவண்ணாமலை போளூர் சாலையிலுள்ள ஈசானிய மைதானத்தில் புதிய வாரச்சந்தையை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார். பின்னர் வாரச்சந்தையில் விவசாயிகள் வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், வேர்க்கடலை போன்ற பல்வேறு பொருள்களைக் காசு கொடுத்து வாங்கி ருசி பார்த்தார்.
இந்த வாரச்சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகள், அரிசி, நவதானியங்கள், மளிகைப்பொருள்கள், பழங்கள் ஆகியவற்றை நேரடியாக சந்தையில் வந்து விற்பனை செய்ய முடியும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாரச்சந்தை நடைபெறும்.
பௌர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபத் திருவிழா நாள்களில் வாரச்சந்தை நடைபெறாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களால் இடைத்தரகர்கள் அதிகம் பயன்பெற்றுவரும் நிலையில், இப்படிப்பட்ட வாரச்சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைப்பொருள்களை விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு போதுமான வருவாய் கிடைக்கும்.
திருவண்ணாமலையில் ஈசானிய மைதானம் அனைத்துப் பகுதி மக்களும் எளிதாக வந்து செல்லக்கூடிய பகுதி என்பதால் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.