திருவண்ணாமலை: ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் இயங்கி வருகின்றது. இந்த பட்டு சொசைட்டி சங்கத்தில் நெசவாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக பதிந்து வைத்து குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக ஓன்றிய அவைத் தலைவர் சேவூர் சம்பத் என்பவர் தலைவராகவும், துணைத் தலைவராக சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் இயக்குநர்களாகவும் இருந்து இதன் நிர்வாக குழுவை நடத்தி வந்தனர்.
மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆரணி பட்டு கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான ஆரணி அருகே இரும்பேடு அரிகரன் நகர்ப் பகுதியில் நெசவாளர்களுக்கு 53 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு, பூங்கா, ரேஷன் கடை உள்ளிட்டவைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு பூங்கா, ரேஷன்கடை அமைப்பதற்கான இடத்தில் ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் சம்பத் சங்க உறுப்பினர் ஒருவருக்கும் சங்கத்தை சாராத 2 நபர்கள் உள்ளிட்ட 3 நபர்களுக்கு
இடம் ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் இது சம்மந்தமாக நெசவாளர்களின் புகாரில் பேரில் பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குநர் உத்தரவின் பேரில் அதிமுகவை சேர்ந்த சேவூர் சம்பத் பதவியை ரத்து செய்தும்; நிர்வாக குழுவை கலைத்தும் உத்தரவு பிறப்பித்து நிவாகத்தை தமிழ்நாடு அரசே கைப்பற்றியுள்ளது. ஆரணியில் பட்டு கூட்டுறவு சங்க சொசைட்டியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் நிர்வாக குழுவை கலைத்த சம்பவம் நெசவாளர்கள் மத்தியில் வரவேற்பையும் பரபரப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தின் நிர்வாகத்தை,தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை துணை இயக்குநர் மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.