திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் நந்தினி உட்பட 15 மருத்துவர்கள், செவிலியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆரணியைச் சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தற்போது மாவட்டளவில் இம்மருத்துவமனையில் நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவது அதிகமாக உள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் விஸ்வநாதன் நேரில் வந்து தீடீர் ஆய்வு செய்தார்.
பின்னர் நோயாளிகளிடம் மருத்துவ வசதி, படுக்கை வசதி, சிகிச்சை ஆகியவை குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை டெங்கு பாதிப்பு இல்லை எனவும், ஆரணியில் காய்ச்சலால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைககள் குறித்து ஆய்வு செய்ததாகவும் இணை இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு!