‘எட்டு வழி சாலை திட்டமும்; விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும்!’ என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதாக சொல்லி இந்த ஐந்து மாவட்டங்களில் மிகக் கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார்கள். விவசாயிகளையும் சகல மக்களையும் மிரட்டி நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்திய நிலைமையெல்லாம் மேற்கொண்டார்கள். பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அதையெல்லாம் மீறி இந்த போராட்டம் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்தது. விவசாயிகளிடம் கருத்து கேட்பது, வனத்துறை அனுமதி பெறுவது, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது என இதையெல்லாம் செய்த பிறகுதான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியுமே தவிர அவசரகதியில் இதை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்திய மோடி அரசாங்கத்திற்கும், எடப்பாடி அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்கிற ஒரு குட்டு என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு செயல்படும் என்று சொன்னால் இந்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் தன்னெழுச்சியான போராட்டத்தை நடத்துவார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்" என்றார்.