திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஆலோசனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலையில் 806 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 33 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் காவல் துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய் துறையினர் மூலம் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, செய்யாறு மருத்துவமனையில் தலா 100 படுக்கைகள் கொண்ட கரோனா வைரஸ் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 24 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வரப்படுகிறது. இதில் 11 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், மீதமுள்ள 13 நபர்களுக்கான ஆய்வறிக்கை விரைவில் வரும்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக 1,710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,652 இருசக்கர வாகனங்கள், ஆறு ஆட்டோ, 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தமாக 1,711 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திலுள்ள ஏழு லட்சத்து 42 ஆயிரத்து 602 குடும்ப அட்டைகளுக்கு அரிசி கோதுமை, அரசு தரும் நிவாரண நிதியாக 1,000 ரூபாய் வழங்க உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கே சென்று இந்தப் பொருள்களை தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை செய்து வருகிறோம்.
மேலும் பொதுமக்கள் காய்கறி, அங்காடி, இறைச்சிக் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துடனும், அலுவலர்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
இதையும் படிங்க... ஓபிஎஸ் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை