திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வேளானந்தல் கிராம பகுதியைச் சேர்ந்த 28 வயதுள்ள இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள பெரிய வணிகவளாகத்தில் காசாளராக பணிபுரிந்துவந்தார். மார்ச் 15ஆம் தேதி சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய இவருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல், சளி, இருமல் இருந்துள்ளது. ஆகையால், ஒரு வாரமாக கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துவந்தார்.
இந்த நிலையில், மார்ச் 28ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது மாதிரிகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்றிரவு அவருக்கு கரோனா பெருந்தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இவர் கரோனா சிறப்பு வார்டில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, வேளானந்தல் கிராமத்தில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு காவல்துறை கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: பி.எஸ்.என்.எல் சிறப்பு சலுகை!