தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் மாநில அரசு தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் ஐந்தாயிரத்தை தாண்டுகிறது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீப காலமாக கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டாயிரத்து 514ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மொத்தம் ஆறாயிரத்து 418 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய அறிக்கையின்படி, பெங்களூரு, வேலூர் பகுதிகளிலிருந்து வந்த தலா இருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 31 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 16 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 12 பேர், முன்களப் பணியாளர்கள் இரண்டு பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 17 பேர் உள்ளிட்ட 82 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆக. 14) பாதிப்பு உறுதியான அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.