திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், முன் களப்பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அவர்களின் மன அழுத்தத்தை போக்கும்வகையில், நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி ஆகியோரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், முன் களப்பணியாளர்கள் தங்களது பணியினை இரவு பகல் பாராமல் செய்துவருகின்றனர்.
இவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளை மதுரை முத்து, பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி ஆகியோர் இணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தினார்கள்.
இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை கண்ட முன் களப்பணியாளர்கள் மூன்று மாத காலமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு சிரித்தனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஓய்வின்றி சிகிச்சை அளித்துவரும் மருத்துவ பணியாளர்களை மகிழ்வித்ததற்காக இரண்டு நகைச்சுவைப் பேச்சாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க... 'சவக்குழி வெட்ட சொல்றாங்க... கொத்தடிமை போல நடத்துறாங்க' - ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த சாதியக் கொடுமை!